BABA

BABA
:)

Wednesday, March 9, 2011

கயல் உண்கண் யான் இரப்ப, துஞ்சிற் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன் மன் (குறள் 1211)
If my fish eating eyes, close in sleep, at my begging...
I could fully relate my sufferings to My Beloved...

...என்னது? சொல்லக் கூடத் தேவை இல்லாமல்...
அவனே வந்து விட்டானா?
அவனோடு கூட்டமாக இன்னும் பலர் வந்து விட்டார்களா?
வந்து என் அப்பா கிட்ட என்னமோ பேசறாங்களா?

ஒரே கோஷமா இருக்கே! ஏதோ ஓதறாங்களே! டும் டும் டும் என்று சத்தம் கேட்குதே! என்னென்னமோ நடக்குதே!
எங்கு திரும்பினாலும் வேலும் மயிலுமா இருக்கே! திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிச்சி? நான் காண்பதெல்லாம் கனவா? நனவா?

சந்தேகமே இல்லை! நனவே தான்!...... தொடும் போது கூசுதே!
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்! - தோழீ நான்!
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்!

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
ஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(1)

(அவன் தந்தைக்கே பாடம் சொன்னவன் ஆதலாலே, என்னைத் தாய்-தந்தையரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவான்! அதனால் தான் ஏரக முருகன்! ஏரகம்=திருவேரகம்=சுவாமிமலை!
*திருப்பரங்குன்றம்=அசடு
*திருச்செந்தூர்=உஷ்ணம்
*பழனி=முறைப்பு
*திருத்தணி=இளைப்பு
*பழமுதிர்சோலை=களைப்பு
*சுவாமிமலை மட்டுமே சிரிப்பு!
அந்த இதழ்க் கோட்டோரம், சந்தனக் காப்பை வழித்தெடுத்தால் தெரியும், கள்ளச் சிரிப்பழகா...மறக்க மனம் கூடுதில்லையே!)

நாளைத் திருமணம் அதற்கென்றே நாளிட்டு
பாளைக் கமுகுடன் பசும் வாழைப்-பந்தல் கீழ்
வேளைப் போதினில் வேல்முருகன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(2)

தோணியன் ஈசரோடு தேவர் குழாம் எல்லாம்
வேணியன் எந்தை வேங்கடவன் மகள்பேசி
காணியல் கூறைச் சீலையொடு மாலையும்
வாணியள் சூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(3)

(சீர்காழித் தோணியப்பர் (படகுப் பிரான்) எனப்படும் சிவபெருமான் தலைமையிலே, அனைவரும் வந்திருந்து,
எந்தை தந்தையாம், சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அண்ணலிடம், என்னைக் கேட்க...
காண அழகுடைய அரக்குச் சிவப்பான கூறைச் சீலையைக் கொடுத்து,
ஈசனின் மானசீக மகளான வாணி, நாத்தனராக மாலை சூட்டி, என்னை அழைத்துச் செல்ல...)

நால்திசை நாரங்கள் கொணர்ந்து நனிநல்கி
வேல்முறைச் சான்றோர் வேதமாம் தமிழ்ஓதி
சேல்விழி் மைந்தன் சேந்தனோடு என்தன்னை
ஆல்மரக் காப்பிடக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(4)

(நாரம்=தண்ணீர்; ஜீவநதி நீர்க் கொண்டு,
வேல்முறை வேளாளச் சான்றோர்கள் தமிழ் மந்திரங்களை ஓத,
பந்தக்காலில் உள்ள ஆலமரத்துக் காம்பிலே கட்டிய மஞ்சக் காப்பினை எடுத்து,
எங்கள் இருவருக்கும் காப்பு கட்ட...)

கதிரொளித் தீபம் வரிசைகள் பலவேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையின் சங்கத் தமிழ்வேள் மண்டபத்துள்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(5)

மத்தளம் கொட்ட நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம் மாதவிப் பந்தல் கீழ்
மைத்துனன் முருகன் திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(6)

(மாதவிப் பந்தல் என்னும் செண்பகக் கொடிகளின் கீழே, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க,
மைத்துனன்-மச்சான் என்று ஆசையோடு அழைக்கும் முருகத் திரு நம்பி,
துளசி மாடம் பொருந்திய, சக்கரம், சங்கு, தண்டு, வாள், வில் துலங்கும் ஐம்படைத் தாலியைக் கழுத்திலே கட்டி,
என் கைத்தலம் பற்றி, என்னை அவனுக்கென்று ஆக்கிக் கொள்ள...)

No comments:

Post a Comment